புதுடெல்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, பாஜகவின் தேசியத் தலைவராகக் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதவியேற்றார். கட்சி விதிகளின்படி தேசியத் தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் என்றாலும், 2024 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து, மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்த நிலையில், பாஜகவிற்கான புதிய தேசியத் தலைவரைத் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கட்சியின் மாநில அணிகளில் தற்போது நடத்தப்பட்டு வரும் நிர்வாகத் தேர்தல்கள் அடுத்த மாதம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மூத்த பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், பாஜக மாநிலத் தலைவர்களில் சுமார் 60 விழுக்காட்டினரின் பதவிக்காலம் முடிந்துவிட்டது என்றும், புதிய மாநிலத் தலைவர்களை நியமிக்கும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்றும் கூறினார்.
மேலும், வரும் பிப்ரவரி மாதம் பாஜகவிற்கான புதிய தேசியத் தலைவர் பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கட்சியின் புதிய தேசியத் தலைவர் அமைச்சரவையில் உள்ளவராகவோ அல்லது கட்சியின் மூத்த நிர்வாகியாகவோ இருக்கலாம் என்றும் இதுவரை எந்த முடிவும் உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


