புதுடெல்லி: இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள முக்கியமான ஆவணமான பான் அட்டை முழுவதும் மின்னிலக்கமயமாக்கப்பட உள்ளது. அதிநவீன வசதியுடன், பான் அட்டை 2.0ஐ கியூஆர் (QR) குறியீட்டுடன் புதிதாக அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கியூஆர் குறியீட்டுடன் கூடிய புதிய பான் அட்டை திட்டத்துக்காக மத்திய அரசுக்கு ரூ.1,435 கோடி செலவாகும். பான் அட்டை வைத்துள்ள 78 கோடி பேரும், கியூஆர் குறியீடுள்ள பான் அட்டைக்காக எவ்வித செலவும் செய்யத் தேவையில்லை என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பழைய பான் அட்டையை மேம்படுத்தி, புதிய அட்டை பயனாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் பிரத்யேக இணையத்தளம் வாயிலாக இதனைச் செயல்படுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அட்டை மூலம் எளிதாக, விரைவான சேவையைப் பெறலாம். பாதுகாப்பு, செலவினம் குறைப்பு போன்ற வசதிகள் உள்ளன. வெளிப்படைத்தன்மை மேம்படும். மேலும் பான் அட்டையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

