ஆந்திரத் தலைநகர் அமராவதிக்கு ரூ.13,600 கோடி நிதி

2 mins read
f17194e9-201b-4b37-a449-15b7d69df9c8
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. - கோப்பு படம்: இந்திய ஊடகம்

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியை உருவாக்குவதற்கு உலகவங்கியும் ஆசிய வளர்ச்சி வங்கியும் இணைந்து 13,600 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க முன்வந்துள்ளன.

அதுகுறித்து ஆந்திர அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாநிலத்தின் தலைநகராக அமராவதியை உருவாக்க, முதற்கட்டமாக ரூ.13,600 கோடியை வரும் ஜனவரியில் வங்கிகள் விடுவிக்கின்றன.

“அமராவதித் தலைநகர் உருவாக்கத்திற்கான மொத்த திட்டமதிப்பீடு ரூ.15,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

“எஞ்சிய நிதியான ரூ.1,400 கோடியை மத்திய அரசு அளிக்கும். மொத்த நிதியும் ஐந்து ஆண்டுகளில் பெறப்படும்,” என்றார் அவர்.

உலகவங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கிகள் அளிக்கும் கடனை மத்திய அரசு பின்னர் செலுத்தும் என்று கூறப்படுகிறது. தேவையான மொத்த நிதி ரூ. 15,000 கோடியையும் மத்திய அரசே பொறுப்பேற்பதாக இதற்கு அர்த்தம்.

20 லட்சம் புதிய வேலைகள்

அடுத்த ஐந்தாண்டுகளில் முதலீடுகளை ஈர்க்க 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆறு முக்கிய கொள்கைகளை சந்திரபாபு நாயுடு இரு நாள்களுக்கு முன் அறிவித்திருந்தார்.

மாநிலத்தின் பொருளிலை முற்றிலும் மாற்றி அமைக்கக்கூடிய அந்த ஆறு கொள்கைகள் மூலம் மாநிலத்தில் தொழில்துறை மேம்படுவதோடு 20 லட்சம் புதிய வேலைகளும் உருவாகும் என சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் 175 சட்டமன்றத் தொகுதிகளில் ஒவ்வொன்றிலும் ஆளில்லா வானூர்தி (ட்ரோன்) உற்பத்தி, மின்சார வாகனங்கள், நகைகள், பொம்மைகள், பாதுகாப்பு மற்றும் விண்வெளி மற்றும் பிற துறைகளில் ஒரு தொழில் பூங்கா இருக்கும் என்று சந்திரபாபு நாயுடு இலக்கு நிர்ணயம் செய்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்