புதுடெல்லி: இந்தியாவில் செயற்கைக் கருத்தரிப்பு, வாடகைத்தாய் நடைமுறைகளை நெறிமுறைப்படுத்தவும் கண்காணிக்கவும் அந்நாட்டு அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
அந்நாட்டில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செயற்கைக் கருத்தரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 7,803 நிலையங்கள் மட்டுமே தேசிய செயற்கைக் கருத்தரிப்பு, வாடகைத்தாய் பதிவகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளன. அவற்றில் 4,268 நிலையங்களுக்கு மட்டுமே இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அண்மை காலமாக உரிமம் பெறாத போலி நிலையங்கள், கருவுறுப்பு மாற்ற முறைகேடுகள் ஆகியவை குறித்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. எனவே, இந்தச் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சை நிலையங்களை முறைப்படுத்த மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, இந்த நிலையங்களுக்கு இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, செயற்கைக் கருத்தரிப்பு, இனப்பெருக்க சிகிச்சை நிலையங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய ஆய்வகப் பொருள்கள், மருத்துவக் கருவிகள் ஆகியவற்றை அரசு அங்கீகாரம் பெற்ற நிலையங்களுக்கு மட்டுமே விற்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் மூலம் போலி, உரிமம் இல்லாத கருத்தரிப்பு நிலையங்களுக்கு இனி மருத்துவப்பொருள்கள் கிடைப்பது முற்றிலும் முடக்கப்படும்.
அதோடு, மருத்துவப் பொருள்களைத் தயாரிப்பவர்களும் விநியோகம் செய்பவர்களும் தாங்கள் பொருள்களை அனுப்பும் கருத்தரிப்பு நிலையம் அரசு அங்கீகாரம் பெற்றதா என்பதைச் சரிபார்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


