சூரிய சக்தி உற்பத்தியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்

சூரிய சக்தி உற்பத்தியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள்

படம்: ஊடகம்

26 Nov 2026 - 1:53 pm

2 mins read

திருவனந்தபுரம்: சூரிய சக்தி உற்பத்தியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க இந்தியாவின் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. லாபகரமான நிகர அளவீட்டுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் சிறப்புக் கட்டணம் வசூலிக்கவும் மாநில ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு உரிமை அளிக்கும் வகையில் விதிகள் திருத்தப்படவுள்ளன.

உயர் நீதிமன்றத்தால் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள கேரள ஒழுங்குமுறை ஆணையத்தின் சூரிய சக்தி உற்பத்தி விதிகளை இத்திருத்தம் ஆதரிக்கிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் பலதரப்பு சூரிய சக்தி உற்பத்தியாளர்களின் தற்போதைய லாபம் குறைந்து மின்கட்டணம் உயரக்கூடும்.

இதற்கான முன்வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்கலச் சேமிப்பு அமைப்பும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான வரம்பை ஆணையங்களே முடிவு செய்யலாம். மின்சாரம் தொடர்பான புகார்களுக்கான குறைதீர் நடைமுறையை வலுப்படுத்த வேண்டும் எனவும் இம்முன்வரைவு கூறுகிறது.

பத்து கிலோவாட்டிற்கு மேல் மின்கலச் சேமிப்பு கட்டாயமாகும். கூரைகளில் மட்டுமன்றி அருகிலுள்ள பிற இடங்களிலும் சூரிய மின் நிலையங்களை அமைக்கலாம். அனுமதிக்கப்பட்ட சுமையைவிட அதிக உற்பத்தித்திறனுடன் நிலையங்களை நிறுவலாம்.

2028 ஏப்ரல் 1 முதல், 10 கிலோவாட்டிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வெவ்வேறு நேரங்களுக்கு ஏற்ப மாறுபடும் கட்டணங்கள் பொருந்தும்.

பயனீட்டாளர்களின் மின்கட்டணம் ஐந்து மடங்கு உயர்ந்தாலோ வழக்கமான தொகையில் ஐந்தில் ஒரு பங்காகக் குறைந்தாலோ விநியோக நிறுவனம் தானாக முன்வந்து அதனை மறுஆய்வு செய்து தீர்க்க வேண்டும்.

தற்போது நிகர அளவீட்டு முறைப்படி கட்டணச் சீட்டுகளைப் பெறும் சூரிய சக்தி உற்பத்தியாளர்கள், பகலில் உற்பத்தி செய்யும் சூரிய சக்திக்கு இணையான மின்சாரத்தை இரவில் மின்தொகுப்பிலிருந்து பெற்று, அதிகப்படியான பயன்பாட்டிற்கு மட்டுமே கட்டணம் செலுத்துகின்றனர்.

பகலிலும் இரவிலும் மின்கம்பிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கடத்தல், விநியோக இழப்புகளைக் கருத்தில்கொண்டு, ஆணையம் நிர்ணயிக்கும் வரம்பைத் தாண்டும் பயன்பாட்டிற்கு 2027 ஏப்ரல் 1 முதல், சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படும்.

இவ்வாறு புதிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்