புதுடெல்லி: சமூக ஊடகங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை (ஏஐ) தவறாகப் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை பாயும் என இந்திய அரசு எச்சரித்துள்ளது.
அண்மையில் அறிமுகமான ‘கிராக்’ என்ற ‘ஏஐ’ தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகப் பல்வேறு தரப்பினரும் புகார் எழுப்பியுள்ளனர்.
‘கிராக்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சில தரப்பினர் ஆபாசப் படங்கள், காணொளிகள், போலிச் செய்திகள் உருவாக்குதல் என்று வரம்பு மீறுவதாகப் புகார்கள் எழுந்தன. அதையடுத்து, அத்தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்த எக்ஸ் நிறுவனம், இச்சிக்கலுக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இந்நிலையில், அத்தகைய செயல்களில் ஈடுபடுவோர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி, தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகள் 2021ல், சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன என்றும் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் இச்சட்டம் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின்படி, ‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் எந்தவொரு தகவலைப் பகிர்ந்தாலும், அது சித்திரிக்கப்பட்ட பதிவு என்பதை அடையாளப்படுத்தும் குறியீடு இடம்பெற வேண்டும் என்றும் அது பயனர்கள், பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரிய வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
புதிய விதிகளின்படி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பயனர்களின் பொறுப்புகள் குறித்து சமூக ஊடகங்கள் அறிவுறுத்தல் வழங்குவது இனி அவசியமாகிறது.
போலிச் செய்திகளை உருவாக்கி பதிவிடும் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படும் என்பதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பயனர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ‘ஏஐ’ தொழில்நுட்ப வசதிகளையும் கருவிகளையும் தவறாகப் பயன்படுத்துவதும்கூட தண்டனைக்கு வழிவகுக்கும் என்பது பயனர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என இந்திய அரசு வெளியிட்ட புதிய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகள் தெரிவிக்கின்றன.
அரசாங்கமும் காவல்துறையும் பிறப்பிக்கக்கூடிய உத்தரவுகளுக்கு சமூக ஊடகங்கள் உடனடியாகப் பதிலளிக்க வேண்டும் என்றும் இதற்கான கால அவகாசம் 36 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

