புதுடெல்லி: இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பாம்பினத்திற்கு ‘டைட்டானின்’ பட நாயகன் லியானர்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
‘ஆங்கய்குலஸ் டிகாப்ரியோய்’ (Anguiculus dicaprioi) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாம்பினம், நேப்பாளத்திலிருந்து இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலம், சம்பா மாவட்டம்வரை காணப்படுவதாகக் கூறப்பட்டது.
அதேபோல, ‘ஆங்கய்குலஸ் ரேப்பி’ (Anguiculus rappi) என்ற இன்னொரு பாம்பினம், சிக்கிம், பூட்டான், அருணாசலப் பிரதேசம் பகுதிகளில் தென்படுவதாகச் சொல்லப்படுகிறது.
‘ஆங்கய்குலஸ்’ என்பதற்கு லத்தீன் மொழியில் ‘சிறிய பாம்பு’ எனப் பொருள்.
பெரும்பாலும் மே - ஆகஸ்ட் மாதங்களில் அந்தப் பாம்பினங்களின் நடமாட்டம் தென்படுகின்றன என்றும் ஆண்டின் மற்ற காலங்களில் அவற்றைக் காண முடிவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதிலும் குறிப்பாக, அரிய வகையான ‘ஆங்கய்குலஸ் ரேப்பி’ பாம்பைக் கண்டதாக கடந்த இருபது ஆண்டுகளில் பதிவுசெய்யப்படவில்லை.
கொவிட்-19 தொற்றால் அறிவிக்கப்பட்ட முடக்கநிலையின்போது, இமயமலையின் மேற்குப் பகுதியிலுள்ள தமது வீட்டின் முற்றத்தில் ‘ஆங்கய்குலஸ் ரேப்பி’ பாம்பைக் கண்டார் வீரேந்தர் பரத்வாஜ் என்ற ஆடவர்.
அதன் படத்தை அவர் சமூக ஊடகம் வாயிலாக வெளியிட, கிட்டத்தட்ட மூவாண்டு ஆய்வுகளுக்குப் பிறகு, ‘லியோபெல்டிஸ் ரேப்பி’ இனப் பாம்பை அது ஒத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 1997ஆம் ஆண்டு வெளியாகி, உலகம் முழுவதும் பெரும்பணம் ஈட்டிய படம் ‘டைட்டானிக்’. அதில் முதன்மைப் பாத்திரத்தை ஏற்றிருந்த அமெரிக்க நடிகர் டிகாப்ரியோ, பருவநிலை மாற்றம், அதிகரித்துவரும் பல்லுயிர்ச்சூழல் இழப்பு, மாசுபாட்டால் மனிதநலத்திற்கு ஏற்படும் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
சுற்றுச்சூழல்மீது அவர் கொண்டுள்ள அக்கறையை மெச்சும் வகையில், புதிய பாம்பினத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ‘அறிவியல் அறிக்கைகள்’ எனும் அனைத்துலகச் சஞ்சிகையில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.