வரிகளைத் தவிர்க்க வருமானத்தை குறைத்து காட்டும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்

2 mins read
03d7cf6a-6828-4e59-97cd-54823f55a03c
இந்தியாவில் வேளாண்மை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி கிடையாது என்பதால் பலர், வரிவிதிப்பிலிருந்து தப்பிக்க பண்ணை வருமானத்தை உயர்த்திக் காட்டும் போக்கு அதிகரித்துள்ளது. - சித்திரிப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: வருமான வரியை தவிர்க்க வேண்டும் என்பதற்காக இந்தியர்கள் தங்களுடைய உண்மையான வருமானத்தை மறைப்பதாக அண்மைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் வருமான சமத்துவமின்மை அதிகரித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் அளித்துள்ள சொத்து விவரங்களை மாதிரியாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில், வசதிபடைத்த இந்தியர்கள் தங்கள் வருமானத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக டெல்லி பொருளியல் பள்ளியின் இயக்குநரான ராம் சிங் கூறினார்.

“வசதிபடைத்த குடும்பங்களைப் பொறுத்தவரை, அவர்களின் செல்வத்தோடு ஒப்பிடும்போது, தெரிவிக்கப்பட்ட வருமானம் மிகவும் குறைவாக உள்ளது. 2021 ஃபோர்ப்ஸ் பணக்கார இந்தியர்கள் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு குடும்பத்திற்கு, அதன் வருமானம், அதன் மொத்த செல்வத்தில் 12ல் ஒரு பங்கு மட்டுமே என்று ஆய்வு மதிப்பிடுகிறது. வரிகளைத் தவிர்க்க வருமானம் மறைக்கப்படுவதை இது காட்டுகிறது,” என்கிறார் ராம் சிங்.

இந்தியாவில் வேளாண்மை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி கிடையாது. ஆனால் இதைப் பயன்படுத்தி வரிவிதிப்பிலிருந்து தப்பிக்க பண்ணை வருமானத்தை அதிகம் காட்டும் போக்கு அதிகரித்துள்ளது என்றும் இதன் மூலம் விவசாய நிலங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

“கடந்த ஆண்டு உலக சமத்துவமின்மை ஆய்வகம் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில், இந்தியாவின் 40.1% செல்வம் 1% மக்களிடம் மட்டுமே குவிந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, பெரும் பணக்காரர்கள் மீது 2% செல்வ வரி விதிக்க வேண்டும். அப்போதுதான் சமத்துவமின்மையை குறைக்க முடியும்,” என்று புதிய ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வருமான சமத்துவமின்மை அதிகம் இருப்பதாக ஏற்கெனவே மதிப்பீடுகள் தெரிவித்துள்ள நிலையில், தற்போது அவை மேலும் அதிகரித்திருப்பதை ஆய்வு முடிவுகள் உணர்த்துவதாக ராம் சிங் சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்தியாவில் வரி ஏய்ப்பு முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வருமானவரித்துறை எச்சரித்துள்ள போதிலும், ஏராளமானோர் வருமானத்தைக் குறைத்துக் காண்பித்து, குறைவான வரிகளை மட்டுமே செலுத்துவதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்