திருவனந்தபுரம்: சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் செய்துள்ள புதிய ஏற்பாடு பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
புதிய ஏற்பாட்டின்படி, 30 நொடிகளுக்காவது சாமி தரிசனம் செய்ய முடிகிறது என பெரும்பாலான பக்தர்கள் கூறியதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
திருப்பதியில் சாமி தரிசனத்துக்குப் பின்பற்றப்படும் வழிமுறையை தற்போது சபரிமலை கோவில் நிர்வாகமும் அறிமுகப்படுத்தி உள்ளது.
முன்பு 18 படிகள் ஏறிய பின்னர், இருமுடி ஏந்தி வரும் பக்தர்கள், இடது பக்கம் திரும்பி அங்குள்ள பாலத்தில் ஏறி, சுற்றி வந்து கோவிலில் வடக்கு பக்கமாக மீண்டும் இறங்கி சாமி தரிசனம் செய்வதே வழக்கமாக இருந்துள்ளது.
இதனால் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதுடன் சில நொடிகள்கூட சாமி தரிசனம் செய்ய முடியவில்லை என்று பலரும் கூறி வந்தனர்.
தற்போது புதிய ஏற்பாட்டின்படி, பக்தர்கள் 18 படிகள் ஏறிய பின்னர், கோவில் கொடிமரத்தில் இருந்து நேரடியாக சாமி தரிசனத்துக்குச் செல்ல முடியும்.
இதன் மூலம் குறைந்தபட்சம் 30 நொடிகள் சாமி தரிசனம் செய்ய முடிவதாக பக்தர்கள் மனநிறைவை வெளிப்படுத்தினர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, மண்டலப் பூசைக்காக சபரிமலை கோவில் கடந்த வியாழக்கிழமையன்று திறக்கப்பட்டது.
அன்று முதல் பக்தர்கள் புதிய ஏற்பாட்டின்படி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.