திருச்சி - மும்பை புதிய விமானச் சேவை

1 mins read
6ac638c3-6d90-45d7-bb3a-5716ed3bd2f6
திருச்சி - மும்பை விமானச் சேவை வழங்கவுள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். - படம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் / flightglobal.com

திருச்சி: இம்மாதம் 30ஆம் தேதி திருச்சி - மும்பை விமானச் சேவை தொடங்கும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரான துரை வைகோ தெரிவித்துள்ளார்.

“பிப்ரவரி 14ஆம் தேதி டெல்லியில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகத்துக்குச் சென்று, உயர் அதிகாரிகளைச் சந்தித்து, திருச்சியிலிருந்து உள்நாட்டு விமானச் சேவைக்கான அவசியம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தேன். அதை ஏற்றுக்கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், சென்னைக்கு விமானச் சேவையைத் தொடங்கியுள்ளது,” என்று சனிக்கிழமை (மார்ச் 22) திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னார்.

இதுவரை, 37 பன்னாட்டு விமானச் சேவைகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் திருச்சியில் செயல்படுத்தி வருகிறது. கூடுதலாக உள்நாட்டுப் போக்குவரத்தைத் தொடங்கியிருப்பதால் திருச்சி மற்றும் 11 சுற்று வட்டார மாவட்ட மக்களின் தொழில், பொருளியல் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என்றார் அவர்.

போக்குவரத்துத் தொடர்புகளை மேம்படுத்துவது மிக முக்கியம் என்பதால் விமானம், ரயில், சாலைப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக விமானப் போக்குவரத்து துறை, ரயில்வே துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறையினருடன் இடைவிடாது பணியாற்றிவருகிறேன். மார்ச் 30ல் திருச்சி - மும்பை விமானச் சேவை தொடங்கப்படவுள்ளது என்று திரு துரை வைகோ விவரித்தார்.

கடந்த 15 ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் இருந்த திருச்சி விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கப் பணிகள் 99 விழுக்காடு நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்