புதுடெல்லி: இந்திய குடிமக்களுக்கான விசா விதிகளை பிரிட்டன் தளர்த்தாது என அதன் பிரதமர் கியர் ஸ்டார்மர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ள அவர், வியாழக்கிழமை (அக்டோபர் 9) இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச உள்ளார்.
புதன்கிழமை (அக்டோபர் 8) மும்பை சென்று சேர்ந்த பிரிட்டிஷ் பிரதமருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மகாராஷ்டிர ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் அவரை வரவேற்றனர்.
பிரிட்டிஷ் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர் கியர் ஸ்டார்மர் இந்தியா வருவது இதுவே முதல் முறை. அவரை வரவேற்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதன்முறையாக இந்தியாவுக்கு வருகைபுரிந்துள்ள பிரதமர் ஸ்டார்மரை வரவேற்பதாகவும் இதுவரை இல்லாத அளவுக்கு ஆகப்பெரிய வர்த்தகக் குழுவுடன் அவர் இந்தியாவுக்கு வந்திருப்பதாகவும் திரு மோடி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“வலுவான, வளமான எதிர்காலத்துக்கான பகிரப்பட்ட நமது தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கான நமது சந்திப்பை எதிர்நோக்குகிறேன்,” என்று மோடி மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் பிரிட்டனும் ‘விஷன் 2035’ எனும் தொலைநோக்குத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. இத்திட்டத்தின் கீழ் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், புதுமை, பாதுகாப்பு, காலநிலை மாற்றம், எரிசக்தி, சுகாதாரம், கல்வி, மக்கள் தொடர்பு ஆகிய முக்கியத் துறைகளில் இரு நாடுகளும் முன்பைவிட கூடுதல் இணக்கத்துடனும் செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து இரு நாட்டுப் பிரதமர்களும் மதிப்பாய்வு செய்ய இருப்பதாக இந்தியப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், தமது இந்தியப் பயணத்தின் மூலம் அந்நாட்டுடனான வர்த்தக, கலாசார ரீதியிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இந்திய ஊழியர்கள், மாணவர்களுக்கு கூடுதல் விசா வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
“இது வர்த்தகம், முதலீடு, வேலை வாய்ப்புகள் ஆகியவற்றை பிரிட்டனுக்குக் கொண்டுவரும் வளம் குறித்த விவகாரம். மாறாக, விசா குறித்த பிரச்சினை அல்ல,” என்றார் பிரதமர் ஸ்டார்மர்.
கடந்த ஜூலை மாதம்தான் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் இருதரப்பு வர்த்தக உறவுகள் மேம்படும் என நிபுணர்கள் கூறி வரும் நிலையில், இந்த புதிய ஒப்பந்தத்தால் பிரிட்டன் செல்லும் இந்திய குடிமக்களுக்கான விசா நடைமுறைகள் தளர்த்தப்படும் என்றும் கூறப்பட்டது.
ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்பதை பிரதமர் ஸ்டார்மர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.