சென்னை: தமிழகம் முழுவதும் புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டியுள்ள நிலையில், பாதுகாப்புக்காக மாநிலம் முழுவதும் 1.10 லட்சம் காவலர்களும் சென்னையில் மட்டும் 19,000 காவலர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் பொது இடங்களில் பட்டாசு வெடிக்கக் காவல்துறை தடை விதித்துள்ளது. மெரினா உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி இல்லை.
மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். கடவுச்சீட்டு, அரசு வேலைவாய்ப்பு சரிபார்ப்பில் சிக்கல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நட்சத்திர விடுதிகள், ரிசார்ட்டுகளின் கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணியுடன் முடித்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் பந்தயத்தைத் தடுக்கவும், வாகனத் தணிக்கைக்காகவும் சென்னையில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

