சென்னை: ஏறக்குறைய 2533 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 30ஆம் தேதி அட்சய திருதியை நாளில் சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக சன்யாச தீட்சை வழங்கி ஆசி வழங்கினார்.
அதன்பின் இளைய மடாதிபதிக்கு ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற பெயர் சூட்டப்பட்டது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது மடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இளைய பீடாதிபதிக்கு தீட்சை வழங்கும் வழிபாடுகள் காலை 5.30 மணிக்கு ஆரம்பமானது. காலை 6:00 மணியில் இருந்து 7:30 மணிக்குள் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் உள்ள பஞ்சகங்கை தீர்த்தத்தில் இளைய மடாதிபதியான சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மாவிற்கு 71வது மடாதிபதியாக சன்யாச தீட்சை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
தீட்சை பெறுவதற்கு முன்பு திருக்குளத்தில் இறங்கிய கணேச சர்மா தனது கடுக்கண், மோதிரம், பூணூல், அரைஞாண் கயிறு ஆகியவற்றை துறந்து, மகிழ்ச்சியுடன் சந்நியாசத்தை ஏற்றார்.
அதன் பின் வேத மந்திரம் முழங்க காலை 6:30 மணிக்கு சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவருக்கு சன்யாச தீட்சை வழங்கினார். தீட்சை வழங்கிய பிறகு காவி வஸ்திரம், கமண்டலம், தண்டத்தை ஸ்ரீகணேச சர்மாவுக்கு விஜயேந்திரர் வழங்கினார்.
இளைய மடாதிபதி தலையில் சாளக்கிராமம் வைத்து, சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, பல்வேறு மந்திர உபதேசங்கள் செய்தார். காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றுள்ள கணேச சர்மாவுக்கு, ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நாமம் சூட்டினார். பின் இருவரும் இணைந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.