எதிர்ப்பையும் மீறி தடையற்ற வர்த்தக உடன்பாட்டை வரவேற்கும் நியூசிலாந்துப் பிரதமர்

2 mins read
‘கூடுதல் வேலைகள், அதிகச் சம்பளம்’
0b2a9d98-7b46-4326-aef2-d8165833f8b5
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லுக்சோன். - கோப்புப் படம்: தி பியூரியோகிராட்

வெல்லிங்டன்: இந்தியாவுடனான தடையற்ற வர்த்தக உடன்பாட்டை நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லுக்சோன் வரவேற்றுள்ளார்.

இந்தத் தடையற்ற வர்த்தக உடன்பாட்டுக்கு நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர் அண்மையில் மறுப்பு தெரிவித்திருந்தார். அதையும் தாண்டி திரு லுக்சோன் இவ்வாறு கருத்துரைத்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

தமது அரசாங்கத்துக்கும் வருங்கால வளர்ச்சிக்கும் இந்த ஒப்பந்தம் மைல்கல்லாக அமையும் என்று திரு லுக்சோன் பெருமைபட்டார்.

“எங்கள் முதல் தவணைக்காலத்தில் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக உடன்பாடு செய்துகொள்வோம் எனக் கூறியிருந்தோம், அதைச் செய்துவிட்டோம்,” என்றார் திரு லுக்சோன். இந்த ஒப்பந்தம், 1.4 பில்லியன் இந்தியப் பயனீட்டாளர்களை ‘வரவேற்று’ கூடுதல் வேலை வாய்ப்புகள், அதிக சம்பளம், கூடுதல் ஏற்றுமதிகளுக்குப் பொருளியல் ரீதியாக ஒப்பந்தம் எவ்வளவு பலனளிக்கக்கூடும் என்பதை விவரித்தார்.

இந்த ஏற்பாடு, தமது அரசாங்கத்திற்கான பெரிய திட்டத்தின் ஓர் அங்கம் என்று திரு லுக்சோன் தெரிவித்தார்.

“அடிப்படைகளைச் சரிசெய்து வருங்காலத்தை உருவாக்குவதாகும்,” என்றார் அவர்.

நியூசிலாந்தின் கூட்டணி ஆட்சியில் இந்த ஒப்பந்தம் குறித்து அண்மையில் கருத்து வேறுபாடு தலைதூக்கியது. இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இலவசமானதோ நியாயமானதோ அல்ல என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் சாடியிருந்தார்.

திரு பீட்டர்ஸ், நியூசிலாந்தின் என்ஸிஎஃப் எனப்படும் நியூசிலாந்து முதன்மைக் கட்சிக்குத் தலைமை தாங்குகிறார். ஒப்பந்தம் குறித்த தமது கவலைகளை இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் தெரியப்படுத்தியதாக திரு பீட்டர்ஸ் கூறியிருந்தார்.

இந்த ஒப்பந்தத்தைத் தாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் திரு ஜெய்சங்கர் மீது தமக்கு மிகுந்த மரியாதை இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

திரு லுக்சோனுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் முன்னதாக இந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம், ஐந்தாண்டுகளில் இருதரப்பு வர்த்தகம் இருமடங்காவதற்கும் 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் டாலர் (25.68 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான முதலீடுகள் சேர்வதற்கும் வகைசெய்யும் என்று இரு தலைவர்களும் கூறினர்.

குறிப்புச் சொற்கள்