மும்பை: இந்தியா, நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி கண்டுள்ளது.
இதன் மூலம் முதன்முறையாக உள்நாட்டில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் (ஒயிட் வாஷ்) முதன்முறையாக இந்திய அணி தோல்வி கண்டுள்ளது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்தது. மூன்று போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி தோல்வி கண்டிருந்தது.
இதையடுத்து மூன்றாவது, இறுதி டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில், முதலில் பந்தடிப்பில் ஈடுபட்ட நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 235 ஓட்டங்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய இந்திய அணி, 263 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. எனினும், சுப்மான் கில், ரிஷப் பந்த் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 28 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த நியூசிலாந்து அணியால் இந்திய சுழல்பந்து வீச்சுக்குத் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர்.
சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின்போது நியூசிலாந்து அணி 174 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது. இதையடுத்து, 147 ஓட்டங்கள் எளிதான இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது இந்திய அணி.
ஏற்கெனவே இரண்டு போட்டிகளை இழந்த இந்திய அணி, இந்த எளிய இலக்கை எட்டிப்பிடித்து ஆறுதல் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியே காத்திருந்தது.
இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து, இறுதியில் 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டனர்.
இதன்மூலம், முதன்முறையாக உள்நாட்டில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரின் அனைத்து ஆட்டங்களையும் இழந்துள்ளது இந்திய அணி.
தோல்விக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா, “ஒரு டெஸ்ட் தொடரை இழப்பது எப்போதுமே வருத்தம் அளிக்கும். அதிலும் ஒரு தொடரை இவ்வாறு இழப்பது ஜீரணிக்க இயலாத ஒன்று,” என்றார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சாதனையைப் புரிந்துள்ளது நியூசிலாந்து அணி.

