குரங்குகள் சூழ்ந்ததால் மலை உச்சியிலிருந்து தடுமாறி விழுந்து உயிரிழந்த புது மணப்பெண்

குரங்குகள் சூழ்ந்ததால் மலை உச்சியிலிருந்து தடுமாறி விழுந்து உயிரிழந்த புது மணப்பெண்

1 mins read
6a4eb9e0-d840-4c46-8a4a-d89c080646aa
உயிரிழந்த அனிதா. - படம்: என்டிடிவி

தூத்துக்குடி: புதிதாகத் திருமணமான பெண் ஒருவர் மலை உச்சியில் குரங்குகளுக்குப் பழங்கள் கொடுத்தபோது நிலைதடுமாறி விழுந்து மரணமடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு திட்டன்குளம் பகுதியைச் சேர்ந்த அனிதா, 24, என்பவருக்கும் சுரேஷ், 29, என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் வேலைக்காக வெளிநாடு சென்ற சுரேஷ், அண்மையில் ஊருக்கு வந்திருந்தார்.

புதுமணத் தம்பதியினர் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோவிலுக்குச் சென்றனர். தரிசனம் முடிந்த பின்னர் மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலிலும் அவர்கள் வழிபட்டனர். கோவிலிலிருந்து வெளியே வந்த இருவரும் குரங்குகளுக்குப் பழங்கள் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக ஏராளமான குரங்குகள் சுற்றிவளைத்ததால், நிலை தடுமாறிய அனிதா மலை உச்சியிலிருந்து விழுந்தார். அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

கண் எதிரிலேயே தம் மனைவி உயிரிழந்ததைக் கண்டு தாங்க முடியாத சோகத்தில் சுரேஷ் கதறினார். மனைவியின் உடல் அருகே அவர் கதறி அழுவதை ஒரு காணொளியில் காணமுடிந்ததாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

கழுகுமலை தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று அனிதாவின் உடலை மீட்டு உடல் கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

“குரங்குகள் திடீரென்று சுற்றி வளைத்ததால் அந்தப் பெண் பீதியடைந்ததுபோலத் தெரிகிறது. என்ன நடந்தது என்று விசாரித்து வருகிறோம்,” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் என்டிடிவி ஊடகத்திடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்