புதுடெல்லி: 2024ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும், அதாவது 100 விழுக்காடு தண்டிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) தெரிவித்து உள்ளது.
2024ஆம் ஆண்டு முழுவதும் 80 வழக்குகளில் 210 பேர் கைது செய்யப்பட்டதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள என்ஐஏ, அதிகபட்சமாக இடசாரி பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கையாக 28 வழக்குகள் பதியப்பட்டு 69 பேர் கைது செய்யப்பட்டதாகக் கூறியது.
மேலும் அந்த அறிக்கையில், “நாடு முழுவதும் 662 இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. 25 வழக்குகளில் தொடர்புடைய 68 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர். இதர 408 குற்றவாளிகள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
“நாட்டின் வடகிழக்கு வட்டார கிளர்ச்சி சார்ந்த 18 வழக்குகள் பதியப்பட்டன. இதில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
“காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்புடைய வழக்குகளில் 101 இடங்களில் சோதனையும் 14 பேர் கைதும் செய்யப்பட்டு உள்ளனர்.
“ஆண்டு முழுவதும் ரூ.19.57 கோடி மதிப்புள்ள 137 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
“பெங்களூரு வெடிகுண்டு வழக்கில் தொடர்புடையவர்கள் வேகமாக அடையாளம் காணப்பட்டனர். பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு, தலைமறைவாக இருந்த 27 பேர் கைது செய்யப்பட்டனர்,” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

