ஸ்ரீநகர்: ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் அசையாச் சொத்துகளை தேசிய புலனாய்வு முகவை (என்ஐஏ) பறிமுதல் செய்துள்ளது.
இந்த சொத்துகள் அனைத்தும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ளவை என்றும் ஜம்முவில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் என்ஐஏ தெரிவித்தது.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு அமைப்புகள் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் வழங்கி வருகின்றன. இத்தகைய அமைப்புகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த தாரிக் அகமது மிர் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரது அசையாச் சொத்துகள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் அமைதி, நிலைத்தன்மை, நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள தேசிய புலனாய்வு முகவை, பயங்கரவாத வலையமைப்புக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கையாகவே சொத்துப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
மன்றாடியது பாகிஸ்தான்
இதனிடையே, ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை காரணமாக, பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு மன்றாடியதாக ஐநா பொதுப் பேரவையில் இந்தியா தெரிவித்தது.
ஐநா கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப் பேசும்போது, உண்மைகளைத் திரித்துக் கூறியதாக இந்தியா விமர்சித்தது. ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதர் பெட்டல் கெஹ்லாட் பேசும்போது, பாகிஸ்தான் பிரதமரின் அபத்தமான நாடகத்தை ஐநா மீண்டும் பார்த்தது என்றும் அவர் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதத்தை ஆதரித்துள்ளார் என்றும் குற்றஞ்சாட்டினார்.
“போர் நிறுத்தத்தில் எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் இடமில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயுள்ள எந்தவொரு பிரச்சினையாக இருப்பினும் அது இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தியப் படைகளால் பல பாகிஸ்தான் விமானப்படைத் தளங்கள் அழிக்கப்பட்டன. பயங்கரவாத முகாம்களில் இந்தியப் படைகளால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பல படங்களை நாங்கள் பார்த்தோம்.
“எந்த அளவிலான நாடகமும் எந்த அளவிலான பொய்களும் உண்மைகளை மறைக்க முடியாது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கிறது,” என்றார் பெட்டல் கெஹ்லாட்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, பாகிஸ்தானுக்கு அனைத்துலக அரங்கில் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது இந்தியா.