சென்னை: தமிழகத்தில் சிலர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக தேசிய புலனாய்வு முகவை (என்ஐஏ) ஏற்கெனவே தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், அந்த அமைப்பின் கொள்கை, கோட்பாடுகளை ஊக்குவிப்போரை முழுமையாகக் கண்டறியும் நோக்கத்துடன் தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) காலை 16 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
தங்களுக்குக் கிடைத்த பல்வேறு தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளதாகக் சந்தேகிக்கப்படுபவர்களைக் குறிவைத்து, அவர்களுடைய மறைவிடங்கள் எனக் கருதப்படும் இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
உரிய ஆதாரங்களை கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டு சோதனை நடத்தப்பட்டதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி, தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புள்ள சிலரை என்ஐஏ கைது செய்தது.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்தன.
அதன் பிறகே தமிழகத்தில் உள்ள இளையர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு, பயங்கரவாத அமைப்புகளில் சேர தூண்டிவிடப்படுவது அம்பலமானது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து என்ஐஏ கவனம் தமிழகத்தின் மீது பதிந்துள்ளது. தொடர்ந்து சோதனை நடவடிக்கைகளும் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஜனவரி 28ஆம் தேதியன்றும் 16 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.