ஒன்பது நாள்களில் சபரிமலைக்கு ஆறு லட்சம் பக்தர்கள் திரண்டனர்

2 mins read
5dcd758d-3b57-437c-a9e5-1349c60b730f
ஒன்பது நாள் காலகட்டத்தில் கோயிலில் வசூலான வருவாயும் கணிசமாக உயர்ந்து ரூ.41.64 கோடியாகப் பதிவானது. - படம்: இந்திய ஊடகம்

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, மண்டலம் - மகரவிளக்கு யாத்திரை தொடங்கப்பட்ட முதல் ஒன்பது நாள்களில், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சென்றுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு (டிடிபி) ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 24ஆம் தேதி அறிவித்தது.

நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்ட கோவிலுக்கு இந்தக் காலகட்டத்தில் 612,290 பக்தர்கள் வந்ததாக டிடிபி தலைவர் பிஎஸ் பிரசாந்த் தெரிவித்தார். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தரிசனம் செய்த 303,501 பக்தர்களுடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது.

இந்தக் காலக்கட்டத்தில் வசூலான வருவாயும் கணிசமாக உயர்ந்து ரூ.41.64 கோடியாகப் பதிவானது. இது முந்தைய பருவத்துடன் ஒப்பிடுகையில் ரூ.13.33 கோடி அதிகரித்துள்ளது. சன்னிதானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திரு பிரசாந்த், திறமையான நிர்வாகமும் பக்தர்களுக்கான மேம்பட்ட வசதிகளும் இந்த உயர்வுக்குக் காரணம் என்றார்.

சபரிமலை வளாகத்தில் பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்ப்பதன் மூலம் கோயிலின் சுற்றுச்சூழல் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறும் பக்தர்களை டிடிபி தலைவர் வலியுறுத்தினார்.

“தந்திரி கண்டரரு ராஜீவரரு (பூசாரி), பக்தர்களின் ‘இருமுடிக்கட்டில்’ (புனிதப் பிரசாதம்) பிளாஸ்டிக் பொருள்களைச் சேர்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும், சில பக்தர்கள் இன்னும் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு வருகின்றனர், இது கோவிலின் பிளாஸ்டிக் இல்லாத மண்டலமாக மாற்றும் அதன் நோக்கத்திற்கு எதிராக உள்ளது,” என்று திரு பிரசாந்த் கூறினார்.

மேலும், புனித பம்பா நதியில் ஆடைகளை விட்டுச் செல்வது என்பது எந்த ஒரு சடங்கின் ஒரு பகுதியாகவும் இல்லை என்றும், நதியை மாசுபடுத்துவதைப் பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் திரு பிரசாந்த் வலியுறுத்தினார். அதிக நெரிசலைச் சமாளிக்க, தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. புனித பதினெட்டம் படிகளில் அதிகாரிகளுக்கான பணி நேரத்தைக் குறைப்பது உள்ளிட்ட வலுவான கூட்ட மேலாண்மை அமைப்பை காவல்துறை செயல்படுத்தியுள்ளது என்று திரு பிரசாந்த் கூறினார்.

“ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 80 பக்தர்கள் இப்போது புனிதப் படிகளில் ஏற முடிவதால், அது நெரிசலைக் கணிசமாகக் குறைக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

குறிப்புச் சொற்கள்