ராய்ப்பூர்: பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற மோதலில் ஒன்பது மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 3) நிகழ்ந்தது.
பிஜப்பூர் - டான்டேவடா மாவட்டங்களின் எல்லையை ஒட்டிய காட்டுப்பகுதியில் காலை 10.30 மணியளவில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டதாக பஸ்தர் வட்டாரக் காவல்துறைத் தலைமை ஆய்வாளர் பி. சுந்தரராஜ் தெரிவித்தார்.
துப்பாக்கிச்சண்டை நீண்ட நேரம் நீடித்ததாகவும் இறுதியில் சீருடையுடன் இருந்த ஒன்பது மாவோயிஸ்ட்டுகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், அவ்விடத்திலிருந்து பேரளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாகத் திரு சுந்தரராஜ் குறிப்பிட்டார்.
பாதுகாப்புப் படையினர் தரப்பில் எந்த உயிருடற்சேதமும் இல்லை என்றும் மாவோயிஸ்ட்டுகளைத் தேடும் பணி தொடர்கிறது என்றும் அவர் சொன்னார்.
இதனுடன் சேர்த்து, இவ்வாண்டில் மட்டும் சத்தீஸ்கர் மாநிலத்தில் 154 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டுவிட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.