தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விண்வெளித் துறையில் ஒன்பது உலக சாதனைகள்; இந்தியா மேலும் சாதிக்கும்: ‘இஸ்ரோ’ நாராயணன்

2 mins read
a3007f41-c963-4ec3-8306-0fbce7821358
‘இஸ்ரோ’ தலைவர் நாராயணன். - படம்: ஊடகம்

புதுடெல்லி: விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முக்கியமான ஒன்பது உலக சாதனைகளைப் படைத்துள்ளதாக ‘இஸ்ரோ’ தலைவர் நாராயணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மேலும் எட்டு உலக சாதனைகளை இந்தியா படைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய அவர், கடந்த 2017ஆம் ஆண்டில் ‘பிஎஸ்எல்வி-சி37’ உந்துகணை மூலம், ஒரே பயணத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இந்தியா வரலாறு படைத்ததாகக் குறிப்பிட்டார்.

“கடந்த 2014ஆம் ஆண்டு, செவ்வாய்க் கிரக சுற்றுப்பாதைத் திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா முடிவு செய்தது. அதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியிலேயே செவ்வாய்க் கிரகத்தை அடைந்த முதல் நாடாக இந்தியா உருவெடுத்தது.

“கடந்த 2023ஆம் ஆண்டில் ‘சந்திரயான்-3’, சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் விண்கலத்தைத் தரையிறக்கிய முதல் நாடாக இந்தியா சாதனை படைத்தது,” என்றார் திரு நாராயணன்.

இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உந்துகணைகள், ஏராளமான செயற்கைக்கோள்களை இந்தியா ஏவியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய முயற்சிகள் தேசியப் பாதுகாப்பு, பொருளியல் வளர்ச்சி, விண்வெளித் தொழில்முனைவோரின் எழுச்சிக்குப் பங்களிப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

அடுத்து வரும் ஆண்டுகளில், இந்தியா விண்வெளித் துறையில் மேலும் எட்டு முதல் பத்து உலக சாதனைகளைப் படைக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் இதற்காக இஸ்ரோ திட்டமிட்டு வருவதாகவும் திரு நாராயணன் கூறினார்.

“எதிர்வரும் 2040ஆம் ஆண்டுக்குள், சந்திரனில் ஒரு மனிதனை தரையிறக்க வேண்டும் என்பதே இந்தியாவின் இலக்கு. இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்காக, நாம் மேற்கொண்டுள்ள பயணத்தின் மற்றொரு மைல்கல்லாக அச்சாதனை அமையும்,” என்றார் திரு நாராயணன்.

குறிப்புச் சொற்கள்