திருவனந்தபுரம்: கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த ஒருவர் ‘நிபா’ கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் ‘நிபா’ கிருமிப் பரவல் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது.
அதன்பிறகு அது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதற்கிடையே, தற்போது கோழிக்கோட்டைச் சேர்ந்த 43 வயது நபருக்கு ‘நிபா’ கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சுவாசக் கருவி உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது குடும்பத்தினரும், அவரோடு தொடர்புடையவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் முரளிதரன் செய்தியாளர்களிடம் தகவல் பகிர்ந்தார்.
“நிபா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் முதலில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றார்.
தொடர்புடைய செய்திகள்
அதே மருத்துவமனையில் அவருக்கு ‘எம்ஆர்ஐ ஸ்கேன்’ எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நபருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ‘ஸ்கேன்’ எடுத்த சுகாதார ஊழியர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்,” என்று அமைச்சர் முரளிதரன் கூறினார்.
கிருமிப்பரவலைத் தடுக்க அமைச்சர் தலைமையில் திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை (ஜூன் 11) உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.
‘ஷிகெல்லா’ பாதிப்பு
இதற்கிடையே, கேரளாவில் ‘ஷிகெல்லா’ நுண்ணுயிர்த் தொற்று பரவி வருகிறது. வயநாடு பகுதியில் உள்ள பள்ளியில் ஒரு மாணவருக்கு வியாழக்கிழமை ‘ஷிகெல்லா’ தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவரையும் சேர்த்து இதுவரை 9 பேர் இந்த நுண்ணுயிர்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாடு பகுதியைச் சேர்ந்த 514 மாணவ, மாணவியர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
மக்கள் விழிப்புடன் இருக்கும்படியும் கிருமித்தொற்று அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

