புதுடெல்லி: இந்தியாவில் அண்மையில் ஏற்பட்ட நிபா கிருமித்தொற்று பேரளவில் பரவுவதற்கான அபாயம் குறைவு என்று உலகச் சுகாதார நிறுவனம் மறுவுறுதிப்படுத்தியுள்ளது.
அதனால், இப்போதைக்கு அந்நாட்டிற்குப் பயணம் சார்ந்த, வணிகம் சார்ந்த தடைகளைப் பரிந்துரைக்க வேண்டிய தேவை இல்லை என்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) அவ்வமைப்பு தெரிவித்தது.
இம்மாதத் தொடக்கத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் இருவரை நிபா கிருமி தொற்றியது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், நிபா தொற்று நீடித்த அளவில் மனிதன் மூலம் மனிதனுக்குப் பரவுவதற்குச் சான்றேதும் இல்லை என்றும் இப்போதைய அச்சுறுத்தலானது தேசிய, வட்டார, உலக அளவில் குறைவுதான் என்றும் உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
24 வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் நிபா தொற்றுக்கு ஆளாயினர். இப்போது அத்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. நிபா தொற்று அறிகுறிகள் இருந்தபோது அவ்விருவரும் பயணம் செய்யவில்லை என்பதால் அது பரவுவதற்கான வாய்ப்பு குறைந்தது.
உலகச் சுகாதார நிறுவனம் மறுவுறுதியளித்தபோதும், பல்வேறு ஆசிய நாடுகள் தங்களது விமான நிலையங்களிலும் நிலவழிச் சோதனைச்சாவடிகளிலும் மருத்துவப் பரிசோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளன.
இதனிடையே, நிபா தொற்றிய இருவருடன் தொடர்பில் இருந்த 196 பேரையும் அடையாளம் கண்டு, கண்காணித்து, அவர்களைச் சோதனைக்குட்படுத்தியதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் எவரிடமும் நிபா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை.
விலங்குகள், குறிப்பாக பழந்தின்னி வௌவால்கள் மூலமாகவோ அல்லது மனிதர்களுக்கு இடையிலான நெருக்கமான தொடர்பு மூலமாகவோ நிபா தொற்று பரவும். அக்கிருமி தொற்றியோர் காய்ச்சல், மூளைவீக்கம் போன்ற கடுமையான நரம்புக் கோளாறு, மூச்சுவிடச் சிரமப்படுதல் போன்றவற்றால் பாதிக்கப்படலாம். நிபா தொற்றியோர் உயிரிழக்க 40% முதல் 75% வரை வாய்ப்புள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இப்போதைக்கு, நிபா தொற்றுக்குத் தடுப்பூசி எதுவும் இல்லை.

