கேரளாவில் நிபா கிருமிப் பாதிப்பு அதிகரிப்பு

கேரளாவில் நிபா கிருமிப் பாதிப்பு அதிகரிப்பு

2 mins read
c31ea1e0-4cb9-4e6c-a169-ea4ee3400237
இந்தியாவின் கேரளாவில் உள்ள ஆயஞ்சேரி கிராமத்தில் செப்டம்பர் 13ஆம் தேதி “நிபா தடுப்பு வட்டாரம்” என்ற பலகையை வைக்கும் குடியிருப்பாளர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

நிபா கிருமியால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த 789 பேர் இப்போது தீவிர கண்காணிப்பில் உள்ளனர் எனவும் அவர்களில் நிபா கிருமி பாதிப்புக்குச் சாத்தியம் அதிகம் உள்ளவர்கள் 77 பேர் எனவும் கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது.

மேலும், கண்காணிப்பில் உள்ளவர்களில் 153 பேர் மருத்துவப் பணியாளர்கள் எனவும் அது சொன்னது.

இதுவரை நிபா கிருமியால் பாதிக்கப்பட்டு இருவர் இறந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

நிபா தாக்கி உயிரிழந்தவரின் 9 வயது மகனுக்கு நிபா தொற்றுக் கண்டறியப்பட்டுள்ளது.

அந்தச் சிறுவன் தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் குறிப்பாக கோழிக்கோட்டில் இருக்கும் பல பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட வட்டாரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

நிபா கிருமி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக் கேரளா 16 குழுக்களை அமைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மருத்துவமனைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தனிநபர் பாதுகாப்புச் சாதனம் அணிந்துகொண்டு பணியாற்றவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது காற்றில் பரவக்கூடிய நோய் இல்லையென்றாலும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடிய தொற்றுநோயாகும்.

இந்த முறை கேரளாவில் காணப்படும் நிபா கிருமி வங்காளதேச திரிபு ஆகும்.

இந்தத் திரிபு அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இது மனிதர்களுக்கு இடையே வேகமாகப் பரவக்கூடியது எனச் சொல்லப்படுகிறது.

நிபா கிருமிப் பரவல் காரணமாக கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் என கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும், திருவிழாக்களிலும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் அதிக அளவில் மக்கள் கூடுவதற்குக் கேரள அரசு தடை விதித்துள்ளது.

வௌவால்களின் சிறுநீர், விலங்குகளின் எச்சங்கள்,பாதி உண்ணப்பட்ட பழங்களின் மாதிரிகள் போன்றவை நிபா கிருமி முதன்முதலில் பரவத்தொடங்கிய மருதோங்கரா கிராமத்திலிருந்து ஆராய்ச்சியாளர்களால் சேகரிக்கப்பட்டன எனக் கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
கிருமித்தொற்றுகேரளா