தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நிர்மலா சீதாராமன்: எந்த ஒரு மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை

2 mins read
8b629f70-6a91-4438-8a21-2f3a6ea68158
இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். - படம்: இபிஏ

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் தாம் தாக்கல் செய்த வரவுசெலவுத் திட்டத்தில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை என்றும் தாம் பாரபட்சம் காட்டவில்லை என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இந்தியாவின் 2024-2025ஆம் நிதியாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை ஜூலை 23ஆம் தேதி அவர் தாக்கல் செய்த நிலையில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி எழுப்பிய எதிர்ப்புக்குரலுக்கு இவ்வாறு பதிலளித்திருந்தார்.

வரவுசெலவுத் திட்டத்தில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை, அவர் ‘மட்டுமீறியது’ என்றார்.

மாநிலங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை; சில மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது; பதவியைக் காப்பாற்றிக்கொள்ளும் வரவுசெலவுத் திட்டம் இது என்றெல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் கார்கே பேசியதை அடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமது பதிலுரையைச் செவிமடுக்காமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துவிட்டதாகக் குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன், “ஒவ்வொரு வரவுசெலவுத் திட்டத்திலும் நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் குறிப்பிட வாய்ப்பு கிடைக்காது. மாநிலங்களின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றால், அது புறக்கணிப்பு ஆகிவிடாது,” என்றார்.

இடைக்கால வரவுசெலவுத் திட்டம், பொது வரவுசெலவுத் திட்டம் ஆகியவற்றில் மகாராஷ்டிராவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் ஏழாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய துறைமுகம் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாநிலங்களின் பெயரைக் குறிப்பிடாமல் திட்டங்களுக்கான நிதி வழங்கப்பட்டதை அவர் சுட்டி, திட்டங்களின் பலன் மக்களைச் சென்றடைவது திண்ணம் என்றார்.

இதையடுத்து, எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டுகின்றன என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்