புதுடெல்லி: இந்தியாவில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் 2025-26ஆம் நிதி ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை (பட்ஜெட்) மக்களவையில் சனிக்கிழமை (பிப்ரவரி 1) தாக்கல் செய்தபோது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் முழுமையான முதல் வரவுசெலவுத் திட்ட அறிக்கை இது.
பீகாரின் பிரபல மதுபானிக் கலைஞர் பரிசாக அளித்த புடவையை அணிந்து வந்திருந்த திருவாட்டி நிர்மலா, முற்பகல் 11 மணியளவில் அறிக்கையைத் தாக்கல் செய்யத் தொடங்கினார். முன்னதாக, அதிபர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார்
வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் பெரிதும் கவர்ந்த அம்சமாக வருமான வரிச் சலுகை இடம்பெற்றது.
நடுத்தர வர்க்க மக்களுக்கு ரூ.12 லட்சம் வரை வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு தனிநபரின் ஆண்டு வருவாய் ரூ.12 லட்சம் வரை இருந்தால் அவர் இனி வருமான வரி செலுத்தத் தேவை இல்லை.
அதன்படி, மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவார்கள்.
இது, இந்தியாவில் பெரும்பான்மையினராக இருக்கும் நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய சலுகையாகக் கருதப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக ஊடகச் செய்திகள் கூறின.
இன்னொரு சலுகையாக, மூத்த குடிமக்களுக்கான வரிவிலக்கு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்போதும், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது.
இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டம் வரி, மின்சாரம், சுரங்கம், நிதி, சீர்திருத்தம் உள்ளிட்ட ஆறு முக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளித்துத் தயாரிக்கப்பட்டு உள்ளது.
அந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களை இங்கு காணலாம்.
மருந்துகளுக்கான சுங்கவரி அடியோடு நீக்கம்
உயிர் காக்கும் 36 வகை மருந்துகளுக்கு சுங்க வரி முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் 6 வகை மருந்துகளுக்கு 5 விழுக்காட்டு வரியில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்த ‘ஹீல் இந்தியா’ என்னும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
மாநிலங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1.5 லட்சம் கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும்
சுற்றுலாத்துறைக்கு 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நான்கு ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.
வீட்டு வாடகைக்கான வருமானவரி உச்சவரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
அதிகபட்சமாக இரண்டு சொந்த வீடுகளுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும்.
புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்களுக்கு வரிச் சலுகை நீட்டிக்கப்படுகிறது.
மின்வாகனங்கள், கைப்பேசிகளின் விலை குறையும்
கைப்பேசி மின்கலன்களை உற்பத்தி செய்வதற்கு வரிச் சலுகை வழங்கப்படுகிறது.
‘லித்தியம்’ வகை மின்கலன்களுக்கு சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்த வரி விலக்குகளால் மின்சார வாகனங்கள் மற்றும் கைப்பேசிகளின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி செலுத்துவதை எளிமையாக்கும் வகையில் புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்பையும் நிதி அமைச்சர் வெளியிட்டார்.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் ஐந்து சிறிய அணு உலைகள் 2033ஆம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
காப்பீட்டுத் துறைக்கான அந்நிய முதலீடு 74 விழுக்காட்டில் இருந்து 100 விழுக்காடாக அதிகரிக்கப்படுகிறது.
செய்கை நுண்ணறிவு மையம்
அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.
வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ‘ஜல்ஜீவன்’ திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படுகிறது.
நகர்ப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
கல்விக்கான செயற்கை நுண்ணறிவு மையம் உருவாக்கப்படும்.
பொம்மை தயாரிப்பில் இந்தியா உலக அளவில் மையமாகத் திகழ இந்தியாவில் பொம்மைகளை தயாரிக்க சிறப்பு திட்டம் உருவாக்கப்படும்
மின்னிலக்க வடிவில் தாய்மொழிக் கல்வி
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மருத்துவப் படிப்புக்கு 75 ஆயிரம் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்.
அடுத்த நிதியாண்டில் மருத்துவப் படிப்புக்கு கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும்.
நாடு முழுவதும் மேல்நிலைப் பள்ளிகள், சுகாதார நிலையங்களுக்கு பாரத் நெட் மூலம் பிராட்பேண்ட் வசதி.
சிறு முதல் பெரிய தொழில் வரை உற்பத்தியை அதிகரிக்க தேசிய உற்பத்தி இயக்கம் உருவாக்கப்படும்.
மாணவர்களுக்கான பாடங்களை தாய்மொழியிலேயே மின்னிலக்க முறையில் வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்படும்.
இவ்வாறு பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரிச் சலுகைகளால் அரசாங்கத்துக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்றார்.