புதுடெல்லி: நேருவின் குடும்பத்துக்கும் அதன் வாரிசுகளுக்கும் உதவுவதற்காக அரசியல் சட்டத்தில் பல முக்கிய திருத்தங்களை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.
பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் ‘இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளின் புகழ்பெற்ற பயணம்’ என்ற தலைப்பில் திங்கட்கிழமை (டிசம்பர் 16) மாநிலங்களவையில் விவாதத்தை தொடங்கிவைத்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “குடும்பத்துக்கும் வாரிசுகளுக்கும் உதவுவதற்காக மட்டுமே ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் துணிச்சலுடன் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியது; திருத்திக் கொண்டே இருந்தது.
“எந்தவொரு திருத்தமும் பொருளியல் நன்மை, சமூக நோக்கம், உரிய செயல்முறை மற்றும் அரசியலமைப்பின் நோக்கம் ஆகிய நான்கு அளவுகோல்களின் அடிப்படையில் இருக்கவில்லை.
“அந்தத் திருத்தங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக அல்ல. மாறாக, அதிகாரத்தில் இருப்பவர்களைப் பாதுகாப்பதற்காகவும் குடும்பத்தைப் பலப்படுத்துவதற்காகவுமே இருந்தன.
“முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு சோவியத் மாதிரியை ஏற்றுக்கொண்டார். ஆனால் அது இந்தியாவுக்குப் பயனளிக்கவில்லை. 50 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு பின்பற்றிய கொள்கைகள் பொருளியலை வலுப்படுத்தவில்லை,” என்று குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் நிர்மலா சீதாராமன்.