புதுடெல்லி: கடந்த இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்பும் பின்பும் பிரதமராகப் பொறுப்பேற்குமாறு தம்மிடம் பலமுறை வேண்டுகோள் விடுக்கப்பட்டதாக அந்நாட்டின் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
இந்தியா டுடே ஊடகத்தின் சந்திப்பு ஒன்றில் திரு கட்காரி இவ்வாறு சொன்னார்.
தாம் பிரதமர் பொறுப்பை ஏற்க விரும்பினால் ஆதரவளிக்கத் தயாராய் இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார் என்று திரு கட்காரி முன்னதாகக் கூறியிருந்தார். அதுகுறித்து மேல்விவரங்கள் வழங்குமாறு கேட்கப்பட்டபோது அவர் விவரித்தார்.
“அத்தகைய வேண்டுகோள் தேர்தலுக்கு முன்பும் வந்தது, பின்பும் வந்தது,” என்றார் அவர். கடந்த ஜூன் மாதம் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகும் அந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டதா என்று கேட்கப்பட்டபோது திரு கட்காரி பதிலளிக்க விரும்பவில்லை.
“எனது கொள்கைகளை நான் விட்டுக்கொடுக்கமாட்டேன். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. பிரதமராக ஆகும் எண்ணம் எனக்கு இல்லை. மிகுந்த மனவுறுதியுடன் எனது கொள்கைகளுக்கேற்ப வாழ்ந்துகொண்டிருக்கிறேன்,” என்று திரு கட்காரி வலியுறுத்தினார்.


