புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) 12வது தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுள்ளார்.
கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கு நிதின் நபின்,45, பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டதால், அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) காலை 11.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சித் தலைவராக நிதின் நபின் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய திரு மோடி, “கட்சி என வரும்போது, நிதின் நபீன்தான் தலைவர். நான் கட்சியின் ஒரு சிறிய தொண்டன். பாஜகவை நிர்வகிப்பது மட்டுமே அவருடைய பொறுப்பு அல்ல. அதனையும் கடந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அனைத்து கட்சிகள் இடையேயும் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்த வேண்டும்,” எனக் கூறினார்.
நிதின் நபின் பாஜகவின் மரபை முன்னெடுத்துச் செல்வார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பீகார் மாநில அமைச்சராக இருந்த நிதின் நபின், கட்சியின் செயல் தலைவராகக் கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கு முன்னர் ஜே.பி. நட்டா பாஜகவின் தேசியத் தலைவராக இருந்தார்.

