தர்பங்கா: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கால்களைத் தொட்டு வணங்க முயன்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை பிரதமர் தடுத்து நிறுத்திய சம்பவம் பீகாரில் அரசு விழா ஒன்றில் நிகழ்ந்தது.
பீகாரின் தர்பங்காவில் புதன்கிழமை (நவம்பர் 13) எய்ம்ஸ் மருத்துவமனைக்கு திரு குமார் தலைமையில் அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த விழாவில் அடிக்கல் நாட்டியதுடன், ஏறத்தாழ ரூ.12,100 கோடி மதிப்பில் பல முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
விழாவில் உரையாற்றிய திரு நிதிஷ் குமார், பிரதமரை வணங்கி அவரது கால்களையும் தொட்டுக் கும்பிட முற்பட்டார். ஆனால், பிரதமர் மோடி அவரைத் தடுத்தி நிறுத்தினார்.
திரு குமார் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது இது முதல்முறையன்று.
கடந்த ஜூன் மாதம் தேசிய ஜனதா கூட்டணியினர் பங்கேற்ற மக்களவைக் கூட்டத்தில், பிரதமர் மோடியின் கால்களைத் தொட்டு வணங்க முயன்ற திரு குமாரை பிரதமர் மோடி தடுத்தார். இச்செயலால் பீகாருக்கு திரு குமார் அவமானத்தை ஏற்படுத்தி விட்டதாக ஜன் சுராஜ் கட்சித் தலைவர் விமர்சித்திருந்தார்.
இதேபோல், ஏப்ரலில் பீகாரின் நவாடாவில் தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமரின் கால்களை திரு குமார் தொட்டு வணங்கினார்.
அதுமட்டுமின்றி, ஜூலையில் விரைவுச்சாலை திறப்பு விழா ஒன்றில் பங்கேற்ற திரு குமார், சாலை விரிவாக்கப் பணியை விரைவில் முடிக்குமாறு கோரினார். அதைத் தொடர்ந்து, தனியார் ஒப்பந்த அதிகாரி ஒருவரின் கால்களில் விழுவதுபோலவும் அவர் சென்றார்.

