பாட்னா: பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் இண்டியா கூட்டணியில் சேர்வதற்கான காலம் வந்துவிட்டது. அவ்வாறு எங்களுடன் அவர், சேர்ந்தால் அவருடைய கடந்தகாலத் தவறுகள் அனைத்தையும் நான் மன்னித்து விடுவேன் என்று கூறியுள்ளார் ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
இந்த அழைப்பை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நிராகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
லாலுவின் அழைப்பு குறித்து பீகார் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள், “மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று லாலு கனவு காண்கிறார். ஆனால், அது ஒருபோதும் நடக்காது,” என்று விமர்சித்துள்ளனர்.
நிதிஷ் குமாருக்காக இண்டியா கூட்டணியின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என்று கூறிய லாலு பிரசாத்துக்கு, நிதிஷ் குமார் மறைமுகமாகப் பதில் கூறியுள்ளார் என்கின்றன ஊடகங்கள்.
லாலு பிரசாத்தின் அழைப்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று முதல்வர் நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவரோ, எதுவுமே தெரியாததுபோல் “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று மட்டும் பதில் கூறியிருக்கிறார்.
பீகாரின் புதிய ஆளுநராக ஆரிஃப் முகமது கான், வியாழக்கிழமை (02-01-2025) பதவியேற்றார். அந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ் குமார், எதுவுமே தெரியாததுபோல் பதில் அளித்துள்ளார்.
நிதிஷ் குமார், ஏற்கெனவே இரண்டு முறை ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து இண்டியா கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தார்.
2015ஆம் ஆண்டில் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சி அமைத்தார். 2017ஆம் ஆண்டில் கூட்டணியைவிட்டு விலகி, 2022 ஆகஸ்ட் மாதம் இண்டியா கூட்டணியின்கீழ் எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்தார். பின்னர் அக்கூட்டணியில் இருந்து விலகி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இப்படி 10 ஆண்டுகளில் நிதிஷ்குமார் நான்கு முறை கூட்டணி மாறியுள்ளார். இந்த ஆண்டு நடக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலை யார் தலைமையில் சந்திப்பது என்பது தொடர்பாக ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜனதா இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, நிதிஷ்குமாரை ‘இண்டியா’ கூட்டணிக்கு மீண்டும் வருமாறு ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அழைப்பு விடுத்துள்ளார் எனக் கூறப்படுகிறது.