பாட்னா: பீகார் முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகிய நிலையில், அவரது மகன் நிஷாந்த் குமார் அம்மாநிலத்தின் துணை முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.
இதையடுத்து, அவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் தன்னை முறைப்படி இணைத்துக்கொண்டார்.
நிதிஷ் குமாரின் ஒரே மகனான நிஷாந்த் குமார் (50 வயது) பிடெக் பட்டதாரியாவார். கடந்த காலத்தில் மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றி வந்த அவருக்கு முன்பு தீவிர அரசியலில் விருப்பமில்லை.
எனினும், கடந்த ஓரிரு ஆண்டுகளில் பொது நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கேற்றாா்.
மேலும் பீகார் அரசின் திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றுவதில் முதல்வர் நிதிஷ் குமாருக்கு பின்னணியில் இருந்து அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உதவியதாகவும் கூறப்படுகிறது.
நிஷாந்தின் அரசியல் பிரவேசம், ஜேடியு தலைமையின் தலைமுறை மாற்றத்தைக் குறிப்பதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ நாராயண் சிங் தெரிவித்தார்.
பத்து முறை முதல்வராகப் பதவி வகித்து உலகச் சாதனை படைத்தவர் நிதிஷ் குமார். அவர் திடீரென முதல்வர் பதவியிலிருந்து விலகியது அவரது கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கூட்டணிக் கட்சியான பாஜகவின் சதி, நிர்பந்தம் காரணமாகவே நிதிஷ்குமார் பதவி விலகியதாக ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
எனினும் பதவி விலகல் என்பது நிதிஷ் குமார் சுயமாக எடுத்த முடிவு என்றும் பீகாரில் அடுத்து அமைய உள்ள புதிய அரசில் நிஷாந்த்தை துணை முதல்வராக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் திரு ஹரி நாராயண் சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நிஷாந்த்குமார் தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.
அவர் துணை முதல்வராகப் பொறுப்பேற்பதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

