முதல்வர் பதவியைத் துறந்த நிதிஷ்: மத்திய அமைச்சராகிறார்

முதல்வர் பதவியைத் துறந்த நிதிஷ்: மத்திய அமைச்சராகிறார்

2 mins read
6b3c5ce2-0dd7-4f2f-afdc-a26712ff96a5
மகன் நிஷாந்த் குமாருடன் நிதிஷ் குமார். - படம்: ஏஎன்ஐ
Google News Preferred Icon

பாட்னா: பீகார் அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் பதவி விலகியுள்ளார். அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளாக பீகார் மக்கள் தன் மீது நம்பிக்கை வைத்து அளித்துவந்த ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பதாக நிதிஷ் குமார் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த வலிமை மூலம்தான் பீகாருக்கும் மக்களுக்கும் முழுமையான விசுவாசத்துடன் சேவை செய்து வருகிறோம்.

“உங்கள் நம்பிக்கை, ஆதரவு காரணமாகவே பீகார் இன்று வளர்ச்சியுடன் கூடிய மரியாதையின் புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளது,” என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தமது பொது வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்து பீகார் சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக வேண்டும் எனத் தாம் விரும்பியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இம்முறை மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாகக் கூறியுள்ளார்.

பீகார் புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்பார் என்றும் நிதிஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் துணை முதல்​வ​ராகப் பொறுப்​பேற்​பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும்போது நிதிஷ் குமார் மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் பத்து முறை முதல்வராகப் பதவியேற்று சாதனைப் படைத்துள்ளார் நிதிஷ் குமார்.

இச்சாதனைக்காக அவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. கடந்த 2005ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த 20 ஆண்டுகளாக பீகார் முதல்வர் பதவியில் நிதிஷ் நீடிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்