புதுடெல்லி: சிந்து நதி நீர் உடன்பாடு தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது என்றும் அதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) கலந்துரையாடல் மன்றத்தில் பங்கேற்கப் பாகிஸ்தான் அமைச்சர் முசாதிக் மாலிக் வந்துள்ள நிலையில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை அதிகாலை டெல்லி வந்தடைந்த திரு மாலிக், மாலையில் நடைபெற்ற மூன்று நாள் மன்றத்தின் தொடக்க நாள் நிகழ்வில் கலந்துகொண்டார். இந்நிகழ்வை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
வழக்கமான நடைமுறைப்படி பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக இந்தியா அக்டோபர் 28ஆம் தேதி அறிவித்திருந்தது. கடந்த ஆண்டு ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையைத் தொடர்ந்து மே 7 முதல் 10 வரை நீடித்த ராணுவ மோதல்களுக்குப் பிறகு, இந்தியாவில் நடைபெறும் நிகழ்விற்குப் பாகிஸ்தான் அமைச்சருக்குப் புதுடெல்லி அழைப்பு விடுத்தது இதுவே முதல் முறையாகும்.
கலாசாரத் துறை வகிக்காத திரு மாலிக் சிந்து நதி நீர் உடன்பாடு குறித்துக் கருத்து தெரிவித்துள்ள நிலையில், இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி 26 உயிர்களைப் பலிவாங்கிய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளில் ஒன்றாக 2025ல் இவ்வுடன்பாட்டை இந்தியா நிறுத்திவைத்தது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த பன்முகக் கட்டமைப்பில் கிடைத்துள்ள வாய்ப்பாகத் திரு மாலிக்கின் வருகையைச் சில வல்லுநர்கள் பார்க்கின்றனர். உறவுகளை வளர்ப்பதில் கலாசாரம் மிக முக்கியப் பங்கு வகிப்பதாகத் திரு மாலிக் செய்தியாளர்களிடம் கூறினார்.
