தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காற்றுத் தூய்மைக்கேட்டுக்கும் மரணங்களுக்கும் தொடர்பில்லை: அரசாங்கம்

2 mins read
cbe35b55-76e1-458f-b58a-41046d65ac8f
இந்தியாவில் காற்றுத் தூய்மைக்கேடு. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: காற்றுத் தூய்மைக்கேட்டுக்கும் மரணங்களுக்கும் தொடர்பிருப்பதாகப் புள்ளி விவரங்கள் காட்டவில்லை என்று இந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சுவாசம் தொடர்பான பிரச்சினைகள், நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்களில் காற்றுத் தூய்மைக்கேடு ஒன்று என மத்திய துணை அமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் எழுத்து வடிவில் குறிப்பிட்டார்.

“சுற்றுச்சூழலைத் தவிர்த்து ஒருவரின் உணவுப் பழக்கங்கள், வேலை தொடர்பான பழக்கங்கள், பொருளியல் ரீதியான நிலைப்பாடு, மருத்துவப் பிரச்சினைகள், நோய் எதிர்ப்பு சக்தி, குடும்பத்தில் வழிவழியாக வரும் உடல் ரீதியான பிரச்சினைகள் போன்றவை சுகாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) நாடாளுமன்ற உறுப்பினர் அ‌ஷோக் சங்கர்ராவ் சவனின் கேள்விகளுக்கு திரு கிர்த்தி வர்தன் சிங் பதிலளித்தார்.

காற்றுத் தூய்மைக்கேட்டால் வரும் பாதிப்பு, நுரையீரல் புற்றுநோய் தொடர்பில் ‘லான்சட் ரெஸ்ப்பிரேட்டரி மெடிசன் ஜர்னல்’ எனும் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகள் குறித்து திரு சவன் கேட்டார். பெரிய மாநகரங்களில் மக்கள் மோசமான காற்றுத் தூய்மைக்கேட்டை எதிர்நோக்குகின்றனரா என்றும் அதுதான் நுரையீரல் புற்றுநோய்ச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமா என்றும் திரு சவன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு திரு சிங், ஆய்வுகளில் இடம்பெற்ற 291 நகரங்களில் 25 நகரங்கள் மட்டுமே ஆண்டுதோறும் ஒன்றிலிருந்து 17 நாள்கள் மோசமான காற்றுத் தூய்மைக்கேட்டுக்கு ஆளாகின்றன என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அந்த நாள்களில் சம்பந்தப்பட்ட நகரங்களில் காற்றின் தரத்தைக் கணக்கிடும் ஏகியூஐ (AQI) குறியீடு 400ஐத் தாண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, தங்கள் மாநிலத்தில் பயிர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது போன்ற விவசாயத்துக்கு இடையூறு விளைவிக்கும் ‘வெர்மின்’ விலங்காகக் காட்டுப் பன்றியை வகைப்படுத்துமாறு கேரள அரசாங்கம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் திரு சிங் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
இந்தியாசுற்றுச்சூழல்நோய்