பெங்களூர்: இந்தியாவின் செயற்கைக்கோள் இணையச் சேவைக்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறை மிகவும் நியாயமானது, பாகுபாடற்றது என்று இந்திய அரசாங்கம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைத் தொடங்குவதைச் சில தொழிலதிபர்கள் தடுத்து வருவதாகப் பெருஞ்செல்வந்தர் எலான் மஸ்க், எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் சாடியிருந்ததைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் மேற்கண்டவாறு கருத்துரைத்தது.
இந்தியத் தொலைத்தொடர்புச் சந்தையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, சுனில் மிட்டலின் பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மஸ்க், அம்பானி, மிட்டல் ஆகிய மூவரின் செயற்கைக்கோள் இணைய நிறுவனங்களும் முதற்கட்ட ஒப்புதல்களைப் பெற்றுள்ள போதிலும், அலைவரிசை ஒதுக்கீட்டிற்காகவும் இறுதி அனுமதிகளுக்காகவும் அவை காத்திருக்கின்றன.
மஸ்க்கின் குறைகூறலுக்குப் பதிலளித்த இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சு, மூன்று நிறுவனங்களின் விண்ணப்பங்களும் ஒரே மாதிரியான ஒழுங்குமுறை நிலையில்தான் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தது.
மேலும், அனைத்து நிறுவனங்களுக்கும் உரிய பாதுகாப்பு மதிப்பீட்டு ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் அந்தச் சட்டக் கட்டமைப்பு பாகுபாடானது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்றும் அமைச்சு விளக்கமளித்தது.
இந்தியாவில் செயற்கைக்கோள் இணையச் சந்தை வரும் 2030க்குள் 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் (S$2.43 பி.) மதிப்பை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியப் பகுதியில் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது ஸ்டார்லிங்க் சாதனங்கள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
