புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசு காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த விவகாரம், அண்மையில் நடந்து முடிந்த டெல்லி தேர்தலிலும் எதிரொலித்தது.
இந்நிலையில், டெல்லியில் 15 ஆண்டுகால பழமையான வாகனங்களுக்கு எரிபொருள் நிலையங்களில் இனி எரிபொருள் வழங்கப்படாது என டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மன்ஜீந்தர் சிங் சிர்சா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் மார்ச் 31ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்து மத்திய எரிபொருள் துறை அமைச்சுக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பழைய வாகனங்களை அடையாளம் காணும் வகையில், எரிபொருள் நிலையங்களில் கருவிகளை இணைத்து வருவதாகவும் திரு மன்ஜீந்தர் தெரிவித்தார்.
பாஜக அரசு டெல்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குள் பொதுப் போக்குவரத்தில் பயன்படக்கூடிய, 90 விழுக்காடு சிஎன்ஜி ரகப் பேருந்துகளை நீக்கிவிட்டு அவற்றுக்குப் பதிலாக மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

