மத்திய, மாநில அரசாங்கங்கள் இணைந்து செயல்பட்டால் எந்த இலக்கும் பெரிதல்ல: மோடி

2 mins read
f54590d7-23ce-489a-a449-316f80fa71f1
டெல்லியில் நடந்த நித்தி ஆயோக் சந்திப்பில் தென் மாநில முதல்வர்கள் மூவர் பங்கேற்கவில்லை. - படம்: பிடிஐ

புதுடெல்லி: இந்தியாவின் மத்திய, மாநில அரசாங்கங்கள் ஒன்றாகச் செயல்பட்டால் எந்த இலக்கையும் அடைந்துவிடலாம் என்று அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடி, நித்தி ஆயோக் சந்திப்பில் கூறியுள்ளார்.

“வளர்ச்சியடையும் வேகத்தை நாம் துரிதப்படுத்தவேண்டும். ‘டீம் இந்தியா’ அணியைப் போல் மத்திய அரசாங்கமும் எல்லா மாநில அரசாங்கங்களும் ஒன்றாகச் செயல்பட்டால் எந்த இலக்கும் அடைய முடியாததாக இருக்காது,” என்று 10வது முறையாக நடந்த நித்தி ஆயோக் சந்திப்பில் திரு மோடி பேசினார் என்று இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

‘விக்சிட் ராஜ்யா ஃபோர் வக்சிட் பாரத்@2047’ என்ற கருப்பொருளுடன் நித்தி ஆயோக் சந்திப்பு நடைபெற்றது. ‘விக்சிட் பாரத்’ (வளர்ந்த இந்தியா) என்பது எல்லா இந்தியக் குடிமகன்களின் இலக்காக இருக்கவேண்டும் என்று திரு மோடி சந்திப்பின்போது கூறினார்.

மேலும், உலகத் தரநிலைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநில அரசாங்கமும் தங்கள் மாநிலத்தில் குறைந்தது ஒரு சுற்றுலாத்தலத்தை உருவாக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, இந்தியாவின் தென் மாநிலங்களின் முதல்வர்களில் மூவர் புதுடெல்லியில் நடந்த நித்தி ஆயோக் சந்திப்பில் பங்கேற்கவில்லை என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி புரியும் புதுச்சேரி மாநிலத்தின் முதல்வரும் அவர்களில் ஒருவர்.

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் அச்சந்திப்பில் பங்கேற்றனர். அதேவேளை, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி ஆகியோர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை.

மைசூருவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு சித்தராமையா நித்தி ஆயோக் சந்திப்பில் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

திரு பினராயி விஜயன், தமக்குப் பதிலாக கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபாலை சந்திப்பிற்கு அனுப்பி வைத்தார்.

திரு பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். அவர் சென்ற ஆண்டின் நித்தி ஆயோக் சந்திப்பிலும் பங்கேற்கவில்லை.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்திப்பில் கலந்துகொள்ளாததற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்