புதுடெல்லி: இந்தியாவின் மத்திய அரசாங்கம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மாநில அரசாங்கங்களுக்கு வழிமுறைகளை அளிக்கவில்லை என்று வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 6) எடுத்துரைத்தது.
என்டிடிவி போன்ற ஊடகங்கள் இத்தகவலை வெளியிட்டன.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள் பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதன் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்து வடிவில் பதிலளித்த இந்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய அரசாங்கம் அத்தகைய வழிமுறைகள் எதையும் மாநில அரசாங்கங்களுக்கு வழங்கவில்லை என்று வலியுறுத்தினார்.
பொது சிவில் சட்டம் என்பது, நாட்டின் அனைத்து குடிமக்களுக்குமான சமய அடிப்படையில் அல்லாத பொதுச் சட்டமாகும். தனிப்பட்ட சட்டங்கள், சொத்து கைமாறுவது, குழந்தைகளைத் தத்தெடுப்பது போன்ற செயல்கள் பொது சிவில் சட்டத்தில் உள்ளடங்கும் என்று கருதப்படுகிறது.
இவ்வாண்டின் இந்திய சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி, பொது சிவில் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் பல வழிமுறைகளை அளித்துள்ளதாகத் தமது உரையில் தெரிவித்தார். இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் வரையப்பட்டுள்ள விதம், பொது சிவில் சட்டத்தை ஊக்குவிப்பதாகவும் திரு மோடி கூறியிருந்தார்.

