புதுடெல்லி: பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதாக இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெள்ளிக்கிழமை (ஜூன் 12) கடுமையாகக் கண்டித்துள்ளார்.
சிந்து நதியின் நீர் பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்போரைச் சென்றடைய இந்திய அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றார் அவர்.
ஹைதராபாத்தில் தெலுங்கானா மாநில பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் உரையாற்றிய திரு சிங், “அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றின் மொழியைப் புரிந்துகொள்ளாதோர்க்கு எத்தகைய பதிலடி தரவேண்டும் என்று இந்தியா அறிந்திருப்பதை ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் மூலம் அரசாங்கம் உலகிற்கு உணர்த்தியது,” என்று கூறினார்.
“பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைத் தற்காலிமாக நிறுத்திவைத்ததன் வாயிலாக மனித நேயம் தொலைத்தவர்கள் நம்மிடமிருந்து தண்ணீரை எதிர்பார்க்க இயலாது என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
அந்தத் தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி, “ரத்தமும் நீரும் இணைந்து பாய முடியாது,” என்று அறிவித்ததை அமைச்சர் சிங் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்தியாவும் பாகிஸ்தானும் 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதி, சிந்து நதி நீர்ப் பங்கீடு தொடர்பில் ஒப்பந்தம் செய்துகொண்டன. ஆனால், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் நம்பகமான முறையிலும் மாற்றத்தகாத வகையிலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கான ஆதரவைக் கைவிடும்வரை இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா அறிவித்தது.
தமது உரையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 12 ஆண்டுகாலச் சாதனைகள் குறித்தும் திரு ராஜ்நாத் சிங் பேசினார். அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு திரும்பப் பெறப்பட்டது, நக்ஸல் ஒழிப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம், நீதித்துறைச் சீர்திருத்தங்கள் ஆகியவற்றை அவர் பட்டியலிட்டார்.
காஷ்மீரில் தற்போது பயங்கரவாதம் ஒழிந்து, சுற்றுலா, முதலீடு, வேலைவாய்ப்புகள் பெருகி வருவதாகவும், ஸ்ரீநகரின் லால் சௌக்கில் அமைதி நிலவுவதாகவும் அமைச்சர் சிங் கூறினார்.

