புதுடெல்லி: “எந்தவொரு சட்டமும், குடிமக்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது; விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் எப்போதும் அவர்களின் வசதிக்காக இருக்க வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் புதுடெல்லியில், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 9) நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா உட்பட தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது, “மத்தியில் மூன்றாவது முறையாக பொறுப்பேற்றது முதல், மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கியே அரசின் பயணம் உள்ளது. நாடு இப்போது, ‘சீர்திருத்த எக்ஸ்பிரஸ்’ கட்டத்தை எட்டியுள்ளது. இந்தச் சீர்திருத்தங்கள் பொருளாதாரம் அல்லது வருவாயை மையமாகக் கொண்டவை அல்ல, முற்றிலும் குடிமக்களை மையமாகக் கொண்டவை.
குறிக்கோள்: மக்களின் முழுத் திறனும் வளர்வதற்கு, அவர்களின் அன்றாடத் தடைகளை நீக்குவதே இதன் குறிக்கோள்.
விதிமுறைகள், ஆவணங்கள் என்ற பெயரில் உள்ள 30 - 40 பக்கப் படிவங்கள் மற்றும் தேவையற்ற காகித வேலைகளின் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வர அரசு விரும்புகிறது. மீண்டும் மீண்டும் சுய விவரங்களைத் தரவு சமர்ப்பிக்கும் முறையை அகற்ற வேண்டும்.
அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்த எக்ஸ்பிரஸ், மக்களின் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்து அவர்களின் தினசரி துன்பங்களை நீக்க, எம்.பி.க்களின் பங்கு மிகவும் அவசியம்.
இது பெரும்பாலும் அரசு அலுவலகங்களில் சாதாரண குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை. மக்களின் வீட்டு வாசலில் அரசின் சேவைகளை வழங்க வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது,” என்று அவர் பேசினார்.

