பங்ளாதேஷில் சிறை வைக்கப்பட்டுள்ள துறவியின் வழக்கு ஒரு மாதம் தள்ளி வைப்பு

2 mins read
243ded21-7d25-40f5-a507-015485d7a817
பங்ளாதேஷ் அரசாங்கத்தைக் கண்டித்து திங்கட்கிழமை (டிசம்பர் 2) மும்பையில் அந்நாட்டின் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஜ்ரங் தள், விஷ்வ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். - படம்: இபிஏ

டாக்கா: பங்ளாதேஷில் கைது செய்யப்பட்டுள்ள இந்து சமயத் துறவிக்கு ஆதரவாக வாதாட வழக்கறிஞர்கள் முன்வராததால் விசாரணை ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

பங்ளாதேஷின் சிட்டகோங் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 3) காலை அவரது வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவர் சார்பில் வாதாட வழக்கறிஞர்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அந்நாட்டின் இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவரான சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி எனப்படும் சந்தன் குமார், நவம்பர் 25ஆம் தேதி டாக்கா அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

அக்டோபர் மாதம் பங்ளாதேஷில் நடைபெற்ற பேரணியில் அந்நாட்டின் தேசியகொடியில் காவி கொடி ஏற்றிய புகாரில், அவருக்கு எதிராக தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தலைநகர் டாக்கா உள்பட பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் ஒருவர் கொல்லப்பட்டதன் தொடர்பில் ஆறு பேரைக் காவல்துறை கைது செய்தது. 35 வயதான அந்த வழக்கறிஞரின் பெயர் சைஃபுல் இஸ்லாம் அலிஃப் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.

பங்ளாதேஷில் சிறுபான்மையினரான இந்துக்களின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று பாஜக, அதன் கூட்டணி கட்சிகள் உள்பட பல கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில், சின்மோய் கிருஷ்ணா தாஸின் வழக்கறிஞர் ராமேன் ராய் தாக்கப்பட்டதாகவும் தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்து உள்ளன.

குறிப்புச் சொற்கள்
பங்ளாதேஷ்கைதுபோராட்டம்