புதுடெல்லி: குற்றவாளிகள் அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடிக்க அரசாங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தன.
இந்நிலையில், புல்டோசர்களை கொண்டு கட்டடங்களை இடிப்பதற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் புதன்கிழமையன்று (நவம்பர் 13) தீர்ப்பு வழங்கியது.
அதில், “சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தன்னிச்சையாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தின் அதிகாரத்தை அதிகார வர்க்கம் எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு குற்றத்தை விசாரித்து அதற்கு நீதி வழங்கும் பணிகள் நீதிமன்றத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளன,” என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
“வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார் என்பதற்காகவே அவரது சொத்துகளை இடிக்க முடியாது. அரசு அதிகாரிகள் ஒருவரை குற்றவாளி என அறிவிக்க முடியாது. அரசு அதிகாரிகள் நீதிபதிகளாக மாறி, குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டை இடிப்பது குறித்து முடிவெடுக்க முடியாது. ஒருவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் அவருக்கும் குறிப்பிட்ட உரிமைகளும் சட்டப் பாதுகாப்பும் உண்டு,” என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.

