கேரளா: மின்தடை விவரங்களை முன்கூட்டியே அறிவிக்க உத்தரவு

கேரளா: மின்தடை விவரங்களை முன்கூட்டியே அறிவிக்க உத்தரவு

2 mins read
3812f443-83aa-4be4-af09-a34fcb79b38c
அண்மைக்காலத்தில் ஏற்படும் ஒழுங்கற்ற, கணிக்க முடியாத மின்தடைகளால் பொதுமக்கள், குறிப்பாக நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாகக் கேரள மாநிலத்தில் புகார்கள் எழுந்தன. - மாதிரிப்படம்: பிக்சாபே

திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலத்தில் இனி மின்தடை குறித்த விவரங்களை குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு முன்பே பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக அரைமணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, எவ்வித முன்னறிவிப்புமின்றித் திடீர் மின்தடை ஏற்படுகிறது.

இத்தகைய ஒழுங்கற்ற, கணிக்க முடியாத மின்தடைகளால் பொதுமக்கள், குறிப்பாக நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதாகப் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற பொது விசாரணைக்குப் பிறகு கேரள மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மாநில மின்சார வாரியத்திற்கு ஓர் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, இனி மின்தடை தொடர்பில் மின்சார வாரியம் தன்விருப்பப்படி செயல்பட முடியாது.

மறுநாளுக்கான மின்தேவையை வாரியத்தால் முன்கூட்டியே ஓரளவிற்கு மதிப்பிட முடியும் என்பதால், வானிலை நிலவரம், மின்சார இருப்பு ஆகியவற்றைக் கணக்கில்கொண்டு, திட்டமிட்டபடி மின்தடை கால அட்டவணையைத் தயாரிக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மின்தடையை ஏற்படுத்த வேண்டியது அவசியமெனில், ஒரு வார காலத்திற்கு நாள்தோறும் அதே குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அதனைச் செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே வேளையில், மாநிலத்தின் தற்போதைய மின்பற்றாக்குறையைத் தீர்க்க இரு நிறுவனங்களிடமிருந்து ஓராண்டு காலத்திற்கு மொத்தம் 200 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான வாரியத்தின் கோரிக்கைக்கு ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

கூடுதல் கட்டணக் கழிவு வழங்க பரிந்துரை

மாநிலத்தில் தற்போது பகல் நேரங்களில் மின்சாரம் உபரியாக உள்ளதாக ஆணையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அதனால், ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட ஒரு கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படாமல் வீணாவதோடு, அதற்கு நிலையான கட்டணமும் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது.

தற்போது கூடுதலாக 200 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படவுள்ளதால், பகல்நேர உபரி மின்சாரத்தின் அளவு நாளொன்றுக்கு ஒரு கோடியே இருபது லட்சம் யூனிட்டுகளாக அதிகரிக்கக்கூடும்.

அதனால், பகல்நேர மின்பயன்பாட்டை மக்களிடையே ஊக்குவிக்கும் பொருட்டு, தற்போது நடைமுறையிலுள்ள பத்து விழுக்காட்டுக் கட்டணக் கழிவை இருபத்தைந்து விழுக்காடாக உயர்த்த ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்