சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தமுறை தேவையற்றதுஎன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
வழக்கமான சுருக்கமுறை திருத்தம் போதுமானது என்றார் அவர்.
“இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வோர் ஆண்டும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பெற்று சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்வது வழக்கமான நடைமுறையாகும். தற்போது, எந்தவித ஆலோசனையும் பெறாமல் வழக்கமான நடைமுறையை மாற்றி சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை அறிவித்திருப்பது சுதந்திரமான, நியாயமான, நடுநிலையான தேர்தல் நடைமுறைகளின் அடிப்படைகளை தகர்க்கும் செயலாகும்,” என்று முத்தரசன் சாடினார்.
வரும் தேர்தலில் ஆளும் தரப்புக்கு ஆதரவாகத் தேர்தல் முடிவுகளை அமைத்துக் கொள்ளும் வகையில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலை ஆளும் கட்சிக்குச் சாதகமாக தயாரித்துக் கொள்ளும் குறுக்கு வழி செயலில் இந்தியத் தேர்தல் ஆணையம் இறக்கி விடப்பட்டுள்ளதாக முத்தரசன் கூறினார்.