புதுடெல்லி: அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் குறித்து உச்ச நீதிமன்றம் கவலைப்படவில்லை என அந்த விபத்து தொடர்பான வழக்கை விசாரிக்கும் நீதிபதி பாக்ஸி தெரிவித்துள்ளார்.
அது ஒரு மோசமான செய்தி என்றும் விபத்துக்கு விமானி செய்த தவறுதான் காரணம் என்று இந்தியாவில் யாரும் நம்பவில்லை என்றும் மற்றொரு நீதிபதியான சூர்யா காந்த் குறிப்பிட்டார்.
எனவே, விமானியின் தந்தை தன் மகனை பிறர் குறை கூறுவதாகக் கருதி மனத்தில் வேதனையைச் சுமக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு சட்டத்தில் குறிப்பிட்ட விதிகள் உள்ளன என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
241 உயிர்களைக் காவுகொண்ட அகமதாபாத் ஏர் இந்தியா விபத்து தொடர்பாக அந்த விமானத்தின் விமானி சுமீத் சபர்வாலின் தந்தை புஷ்கர் ராஜ் சபர்வால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
விபத்து குறித்து நடத்தும் விசாரணையைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கொண்ட குழு அமைக்க வேண்டும், விமான விபத்து பணியகம் தற்போது மேற்கொண்டு வரும் விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே அவரது கோரிக்கை.
இந்த வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) நீதிபதிகள் சூர்யா காந்த், ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமெரிக்காவின் ‘வால்ஸ்திரீட் ஜர்னல்’ இதழில், ‘விபத்து நிகழ விமானி செய்த தவறுதான் காரணம்’ என்று செய்தி வெளியானதை மனுதாரரின் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், நீதிபதிகள் இருவரும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, மனுதாரர் தரப்பில் விமான விபத்து விசாரணைகள் தொடர்பான அனைத்துலக மரபுகளுக்கு இணங்க விசாரணை நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், மனுதாரர் புஷ்கர் ராஜ் சபர்வாலின் மனுவுக்கு பதிலளிக்கக் கோரி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது.

