சென்னை: பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு இருப்பதாக நடிகரும் தவெக தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நிகழ்ந்த குற்றச் செயல்களைப் பட்டியலிட்டு அவர் வியாழக்கிழமை (மார்ச் 12) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், “தங்களது கல்லாப்பெட்டிக் கூட்டணியைத் தக்கவைப்பதில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே.
“தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயதுச் சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது.
“மதுராந்தகம் அருகே 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார்.
“ஒன்றரை வாரத்திற்குள் இதுபோன்ற பாதுகாப்பில் அலட்சியமும் எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?
“பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. முதியோர்களுக்குப் பாதுகாப்பில்லை. இளைஞர்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படி. பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என்ற நிலை,” என்று விஜய் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

