புதுடெல்லி: இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த எந்த அமைப்பும் இனி துணியக்கூடாது என்றும் அப்படியோர் சூழலை உருவாக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
செங்கோட்டை குண்டுவெடிப்புக்குக் காரணமானவர்களுக்கு கிடைக்கப்போகும் தண்டனை, இத்தகைய பாடத்தை பயங்கரவாதிகளுக்கு கற்றுத் தரும் என அவர் குஜராத்தில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டார்.
“குற்றவாளிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை, இந்தியா எந்த வடிவத்திலும் பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ளாது என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும். இந்தியாவுக்குத் தீங்கு விளைவிக்க முயற்சி செய்யும் எவரும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்,” என்றார் அமித்ஷா.
டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்குவதை உறுதி செய்வதற்கான பிரதமர் மோடியின் உறுதிப்பாடு முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இதனிடையே, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் சதி முறியடிக்கப்பட்டது.
இது தொடர்பாக அந்த அமைப்புக்கு வேலை பார்த்த பத்துப் பேரை பஞ்சாப் மாநிலத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஐஎஸ்ஐ அமைப்புக்காக வெளிநாடு ஒன்றில் இருந்து செயல்பட்ட மூன்று பேருடன் பஞ்சாப்பில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இருந்ததும் அம்மூன்று பேரின் உதவியுடன் கையெறி குண்டுகளைப் பெற்றதும் தெரியவந்துள்ளது.
மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியதாகவும் அதை முறியடித்துவிட்டதாகவும் பஞ்சாப் காவல்துறை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, டெல்லி மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 32 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியது உளவுத்துறை விசாரணையில் அம்பலமானது.
செங்கோட்டை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புள்ள மூன்றாவது காரையும் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
இதுகுறித்து உளவுத்துறை விசாரணை மேற்கொண்டபோது மேலும் பல கார்களில் வெடிமருந்துகளை நிரப்பி, டிசம்பர் 6ஆம் தேதி நாடு முழுவதும் 32 இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்த தகவல் தெரிய வந்தது.
இதற்காக பல கார்களை ஏற்பாடு செய்து வெடிமருந்துகளை வைப்பதற்கு ஏற்ற வகையில் அவற்றின் உள் அமைப்பை மாற்றி அமைத்துள்ளனர்.
இவ்வாறு எத்தனை கார்களை அவர்கள் மாற்றம் செய்துள்ளனர் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

