புதுடெல்லி: உண்மையின் வெற்றியை யாரும் அலட்சியப்படுத்தக் கூடாது என காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சசிதரூர் கூறியுள்ளார்.
இவரது தலைமையிலான எம்பிக்கள் குழு ஐந்து நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ குறித்து விளக்கம் அளிக்க உள்ளது.
இதற்காக சசி தரூர் தலைமையிலான குழு மே 24ஆம் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றது. பயணத்துக்கு முன்பு இத்தகவலை தமது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சசிதரூர்.
“அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில், அமெரிக்காவுக்குச் செல்கிறேன். அந்நாடுகளில் இந்தியா மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிப்போம்.
“அமைதி நம்பிக்கையூட்டும் பணிகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் இச்செயல் ஒருநாள் உலகிற்குப் புரியவரும். பயங்கரவாதத்தால் இந்தியாவை ஒடுக்க முடியாது,” என்று சசிதரூர் தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் காணொளி ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அனைத்துக் கட்சிக் குழுவில் சசிதரூர் இணைந்திருப்பது காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.